written by:
Dr. M.H.M. Nazeem, Senior Lecturer, University of Colombo, Unani Section
BUMS (Hons) MPhil Unani (Colombo), EMA (Ceylon Medical College Council)

Note: There will be delay in replying to your question
குறிப்பு: இப்பகுதியில் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு டாக்டர்களின் பதில் அளிப்பதில் தாமதமாகலாம்.



மாதவிடாய் ஏற்படுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பிலிருந்தே ஏற்படக்கூடிய பல நோய் அறிகுறிகளைக் கொண்ட நிலைமை Premenstrual Syndrome என அழைக்கப்படுகின்றன. இதன் போது உடல் நிலையும் மன நிலையும் பாதிக்கப்படுகின்றன. அனேகமான பெண்களுக்கு சாதாரண நோய் அறிகுறிகள் காணப்பட்டாலும், ஒரு சில பெண்களுக்கு அதி தீவிர தாக்கத்தை உண்டு பண்ணி தமது அன்றாட வேலைகளை செய்வதற்குக் கூட முடியாத நிலை ஏற்படும்.

இந்நோய் மனநலப் பாதிப்பினால் வருவதாகவே ஆரம்பத்தில் கருதப்பட்டது, ஆனாலும் தற்போது உடல்நல பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சில காரணங்களும் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. முக்கியமாக ஹோர்மோன்களின் வித்தியாசத்தினாலும் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் உடம்பில் சீனியின் அளவு குறைவதனாலும் சில விட்டமின் மற்றும் கனியுப் புக்களின் குறைபாட்டினாலும் இந்நிலை ஏற்படுகின்றது.

இந்நோயின் அறிகுறிகள் பலவகைப்பட்டன. மாதவிடாய் ஏற்படுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பிருந்தே மனச்சோர்வு, களைப்பு, மார்பக நோவு அல்லது வீக்கம், அமைதியாக இருக்க முடியாத நிலை, மனச்சோர்வு, அதிக கோபம், தூக்கமின்மை , அதிக பசி, கிரகிக்க முடியாத நிலை, தனிமையை விரும்புதல், தலைவலி, உடம்புவலி, வயிறு ஊதுதல், அதிக பருக்கள் வெளியாகுதல், மலச்சிக்கல் அல்லது வயிற் றோட்டம் போன்ற பல வகையான நோய் அறிகுறிகள் காணப்படலாம்.

ஆனாலும் மேற்குறிப்பிட்ட நோய் அறிகுறிகள் எல்லோருக்கும் ஒரே மாதிரியாய் இருப்பதில்லை . கிட்டத்தட்ட 75 வீதமான பெண்கள் மேற்கூறிய நோய் அறிகுறிகள் சிலவற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனாலும் இவர்களுக்கு நோய் அறிகுறிகள் தீவிரமாக இருக்காது. இதற்கு மாறாக ஒரு சில பெண்களுக்கு மேற்கூறிய நோய் அறிகுறிகள் தீவிரமாக இருப்பதோடு தனது அன்றாட வேலைகளுக்கு கூட தடையாக இருக்கும். ஆனால் மாதவிடாய் ஆரம்பித்து ஒரு சில நாட்களில் இந்நோய் அறிகுறிகள் இல்லாமல் போய் அடுத்த மாதவிடாய் ஏற்படுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு மீண்டும் ஆரம்பிக்கும். மேற்கூறிய நோய் அறிகுறிகள் வேறு ஒரு சில நோய்களிலும் காணப்படுவதால் சரியான நோய் நிர்ணயம் செய்ததன் பின்பே சிகிச்சை ஆரம்பிக்க வேண்டும்.

எனவே இந்நோய் உங்களைத் தொடர்ந்தும் ஆக்கிரமிப்பதற்கு விடாமல் உங்கள் வாழ்க்கை நடை முறைப் பழக்கத்தை மாற்றுவதனாலும் மற்றும் சில சிகிச்சைகளினாலும் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம் அல்லது நோய் அறிகுறியின் தீவிரத்தன்மையைக் குறைக்கலாம். - இறைச்சி, பதனிடப்பட்ட உணவுகள், கோப்பி, அதிகளவு சீனி, மென்பானங்கள், சொக்லேட் போன்றவைகள் முற்றாக தவிர்த்துக்கொள்ள வேண்டும், அத்துடன் உப்பு உட்கொள்வதனையும் கட்டுப்படுத்துவது நன்று. அத்துடன் உரிய நேரத்திற்கு சாப்பிடுவதும் தூங்குவதும் முக்கியமாகும்.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சி யின்படி இரவில் தூக்கத்தின் போது சுரக்கப்படுகின்ற மெலடோனின் என்ற ஹோர்மோன் இந்நோயின் தீவிரத்தன்மையைக் குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் ஒரு நாளைக்கு ஆகக் குறைந் தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்தல் வேண்டும். Brisk walking, Deep breathing, யோகாப் பயிற்சி போன்ற வைகள் நிவாரணத்தை தரக்கூடியன. உணவைப் பொறுத்தவரையில் மரக்கறி வகைகள் தானிய வகைகள் விசேடமாக சோயா, மொச்சக்கொட்டை போன்றவைகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளல் வேண்டும்.

விட்டமின்களைப் பொறுத்தவரையில் கல்சியம், மெக்னீசியம், விட்டமின் D,E போன்றவைகள் ஒழுங்கான மாதவிடாய் சக்கரத் தொழிற்பாட்டுக்கு மிகவும் முக்கியமாகும். மேற்குறிப்பிட்டுள்ள சிபாரிசுகளுக்கு குணம் கிடைக்காவிட்டால் வைத்தியர்களின் ஆலோசனையின்படி தகுந்த சிகிச்சையை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இந்நோய் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தாவிட்டாலும் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலம் நெருங்கும் போதும் பாரிய மன அழுத்தத்திற்கு இந்நோயாளிகள் உள்ளாக்கப்படுகின்றார்கள். இதன் காரணமாக Depression எனப்படும் மனச்சோர்வு நோய்க்கு சில பெண்கள் ஆளாக்கப்படுகின்றார்கள். ஆனாலும் அநேகமான பெண்களுக்கு இப்பிரச்சினை குழந்தை கிடைத்ததும் இல்லாமல் போய்விடுகின்றது.

யுனானி வைத்தியத்துறையைப் பொறுத்தவரையில் இதற்கு பல சிகிச்சை முறைகள் உள்ளன. இச் சிகிச்சை மூலம் பலர் நல்ல பயனைப் பெற்றுள்ளனர். இதற்கென இந்தியாவில் யுனானி மருத்துவத்தில் நன்கு பயிற்சி பெற்ற யுனானி மருத்துவ பீடத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக சேவையாற்றும் வைத்தியர்கள் உள்ளனர். விசேடமாக இளம் பெண்களுக்கு ஒரு செய்தியாக இயற்கை உணவு வகைகளை கொண்டும் போதியளவு உடற்பயிற்சி மூலம் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்களில் இருந்து தவிர்ப்பதன் மூலமும் Premenstrual Syndrome இன் தாக்கத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும்.